மழையும் அமாவாசையும்.
மழைக்கான
அறிகுறிகள் சுமந்த
வானம்..
காற்றைக்கிழித்து...
முன்னேறுகிறது...
எனை சுமந்த
அரசு வாகனம்...
இதே போல...
மழை பொழிந்து கூரை
ஒழுகிய அமாவாசை
நாளில்
பிரசவித்தாளாம்...
என்னை...
அமாவாசையில
பொறந்த புள்ள
களவாணி யா
போய்டும்டீ...னு
ஊரெல்லாம்
பேசியும்...
புல்கட்டை முதுகிலும்
விறகு கட்டை தலையிலும்
என்னை மாரிலும்
சுமந்தாள்...
கருமைபூசி
பொறந்த எனக்கு
மையிட்டு
திருஷ்டி கழித்தாள்...
உலர்ந்த அவள்
உதடுகள்
மறைத்த கதைகள்
ஏராளம்...
உடைந்து விழுந்த
அவள்
நகங்களெல்லாம்
நிலவாய் தான்
ஒளிர்ந்தது..
களவாணியா
போற பயல
பள்ளியோடத்துக்கு
ஏன்டி அனுப்பறனு
கேட்ட அப்பனுக்கும்..
ஊருக்கும்...
என்னையே
பதிலாய் தர
அவள் உழைத்தாள்..
நினைவடுக்கின்
வலிகள் நிறுத்தி
அவளைக்காண...!
ஓய்ந்து கிடக்கும்
அவள் கைகள்
பற்றி அமர்கிறேன்...
இடுங்கிய விழிகளை
மேலும்இடுக்கி
கூர்ந்து நோக்கி ....
கைப்பற்றி சிரித்தாள்...
ஏதோ சாதித்த
நிம்மதி அவள்
முகத்தில்...
சோ வென்ற மழை...
சாரல் வீச...
விளக்கு அணைய..
யாரோ சொல்கிறார்கள்....
அமாவாச அதுவுமா
கரண்ட
புடுங்கிட்டானுங்களே...
இறுகிய
அவள் கரங்களில்
அவளது கடைசி துடிப்பு...
இப்படி தான்
துடித்ததோ...
அவள் தேகம்..
எனைப்பெற்ற
அந்நாளிலும்....
அவள் கைவிலக்கி
மழை நனைந்தேன்..
மழையோடு
பெருகிய கண்ணீர்...
விளக்குகள்
ஒளிர...
வீட்டு முகப்பில்
பளீரிட்டது
அவள் உழைப்பு...
மாவட்ட ஆட்சியர்
என்ற எழுத்துக்கள்
சுமந்தபடி....
Comments
Post a Comment